செய்திகள்

கோவையில் செயல்படும் மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாலை மலர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அச்சகங்கங்களின் மறு சீரமைப்பு , இணைப்பு என்ற மத்திய அரசின் முடிவின் காரணமாக கோவை மத்திய அரசு அச்சகத்தை மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மத்திய அரசு அச்சகத்துடன் இணைக்க முடிவு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிந்தேன்.

கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகம் நிறுவப்பட்டு, அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளோடு நன்றாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தொழிலாளர்களின் குடும்பத்தினர் நலன், அந்தப் பகுதி மக்கள் மற்றும் தேசிய நலன் கருதியும் தென்னிந்தியாவில் ஒரு பெரிய நிறுவனமாக செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் அரசு அச்சகத்தை அதே நிலையில் தொடர அனுமதிக்க வேண்டும்.

அச்சகம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு முன்னிலையிலேயே இருப்பதாக அறிகின்றேன். மேலும் நான்கு வருடங்கள் இயங்குவதற்குத் தேவையான பணி உத்தரவுகளை அச்சகம் பெற்றுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்குத் தேவையான அச்சுப் பிரதிகளை இந்த அச்சகம் முழுமையாக நிறைவு செய்து வருகின்றது.


தொழிலாளர்களின் துயரம் மற்றும் மனப்பூர்வமான வேண்டுகோளும் அரசின் முடிவைவிட முக்கியமானதாக உள்ளதால், அவர்களின் துயர் நீக்க கருணையோடு தங்களுடைய முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

கோயம்புத்தூர் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுடைய நடு வயதைக் கடந்த நிலையில், பிள்ளைகளும் பள்ளிப் பருவத்தைக் கடந்து உயர்கல்வி பெற்று வரும் நிலையிலும், பெண் பிள்ளைகள் திருமண வயதை எட்டிய நிலையிலும், வயதான பெற்றோர்களுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கி வருகின்ற நிலையிலும் அனைத்தையும் பராமரித்து வாழ்க்கையின் முக்கியப் பிராயத்தில் பொறுப்போடு பணியாற்றி வருகின்றார்கள்.

எனவே தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் துயரம் நீக்க தமிழக மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகத்தை மூடுகின்ற முடிவை கைவிட்டு, மற்ற அச்சகங்கள் போலவே கோயம்புத்தூர் அச்சகத்தையும் மென்மேலும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுகிறேன்.