செய்திகள்

நான் ராசி இல்லாதவனா?- வைகோ ஆவேசம்

மீம்சில் என்னை ராசியில்லாத தலைவர் என்று சொல்பவர் என்னை விரோதியாக நினைப்பது மட்டுமல்ல நான் நாட்டிலேயே இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனியார் டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மகா கெட்டிக்காரர்கள். திரிபுராவில் லெனின் சிலை அடித்து தகர்த்து தள்ளப்பட்டது. அதுபோல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா பதிவிட்டார். அதை அட்மின் போடவில்லை. ராஜாதான் போட்டுள்ளார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திராவிட இயக்கங்களை அழிக்க பெரியார் என்ற அடித்தளம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

பா.ஜனதா இன்று இந்தியாவுக்கு பெரும் கேடு. அது ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் எடுப்போம். வாஜ்பாய் போல மோடி நல்ல ஆட்சிசெய்வார் என்று நினைத்தோம். அது நடக்கவில்லை. அவர் காங்கிரசை விட மோசமாக ஆட்சி நடத்துவதால் அவரை எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்றாமல் தடுப்பதற்கும், தமிழக மக்களின் நன்மைக்காகவும் தி.மு.க.வுடன் கூட்டு வைத்துள்ளோம்.

மக்கள் நல கூட்டணியை அமைத்து மாற்று அரசியலை முன்னெடுக்க முயன்றோம். அந்த முயற்சி தோற்று விட்டது. யாருடைய முகமூடியையாவது போட்டுக் கொண்டு தமிழகத்தில் கால்பதிக்க பா.ஜனதா முயல்கிறது.

அதற்கு இடம்கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்க முடிவு செய்துள்ளேன்.

என்னைப் பற்றி இணைய தளங்களில் வரும் மீம்சை பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ஒரு அறையில் உட்கார்ந்து அரசியல் பற்றி அவர்களாக கற்பனை செய்து யாரையாவது கேலி பண்ணனும், கிண்டல் பண்ணனும் என்று போடுகிறார்கள்.

நான் அதை பார்ப்பேன். ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவரவர் சந்தோஷத்துக்கு போட்டு இருக்கிறார்கள். ரசித்துவிட்டு போகட்டும் என்று இருப்பேன். அதைப்பற்றி நான் வருத்தப்படுவதில்லை.

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எனக்கு ஆதரவாகவே மீம்ஸ் போட்டு வருகிறார்கள். சமூக வலை தளங்களில் வரும் மீம்ஸ் எல்லாவற்றையுமே பார்க்கிறேன்.

மீம்சில் என்னை ராசியில்லாத தலைவர் என்று சொல்பவர் என்னை விரோதியாக நினைப்பது மட்டுமல்ல நான் நாட்டிலேயே இருக்கக் கூடாது என்று நினைக்கிறவன். அவன் என் மீது எந்த குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என்கிற போது இப்படி போடுகின்றான்.


தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேறிய பிறகு தெற்கு சீமையிலே தி.மு.க.வை கட்டிக்காத்தவன் நான் என்று கலைஞராலும் எல்லோராலும் பாராட்டப்பட்டேன். இந்த கறுப்புதுண்டு தான் தெற்கே ஒரு பகுதியை ஜெயிக்க வைத்தது. மயிலாடுதுறை இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்தது. 2 வருடம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தேன். 2 தடவை கலைஞர் வந்து பார்த்தார். 2004 நாடாளுமன்ற தேர்தலில் 64 நாட்கள் நான் பிரசாரம் செய்தேன். அப்போது 40 தொகுதிகள் வெற்றிக்கு முக்கிய காரணம் வைகோ பிரசாரம் என்று பத்திரிகைகள் எழுதின.

நான் ராசி உள்ளவன், ராசியில்லாதவன் என்று நினைப்பதில்லை. நான் பகுத்தறிவாளன். வைகோ அரசியலில் அழிந்து விடுவார் என்று நினைத்தவன் இப்போது எழுந்து வரும்போது மீம்ஸ் போடுகிறான். இந்த மீம்சை பார்த்து என்மீது எவ்வளவு எரிச்சல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வேன்.