செய்திகள்

பா.ஜ.க. தலைவர்கள் புடைசூழ குஜராத் மாநில எம்.எல்.ஏ. பதவியை ஷங்கர்சிங் வகேலா ராஜினாமா செய்தார்

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், சட்டசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஷங்கர்சிங் வகேலா, பா.ஜ.க. தலைவர்கள் புடைசூழ தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1996 – 1997-ம் ஆண்டில் பதவி வகித்தவர் ஷங்கர்சிங் வகேலா. பா.ஜ.க.வை சேர்ந்த இவர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது இயங்கிவரும் 13-வது சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றி வந்தார்.

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபையில் ஆளும் பா.ஜ.க.வின் பலம் 121 ஆகவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 57 ஆகவும் இருந்தது. சட்டசபையின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஷங்கர்சிங் வகேலா-வை முதல் மந்திரி வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என இவரது ஆதரவாளர்கள் கட்சிக்குள் போர்க்கொடி உயர்த்தினர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வகேலாவை முதல் மந்திரி வேட்பாளராக முன்னிறுத்தினால் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை உருவாக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இறுதிமுடிவு எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது.

இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வகேலாவுக்கு ஆதரவான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் எட்டு பேர் கட்சி மேலிடத்தின் உத்தரவை மதிக்காமல் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து வாக்களித்திருந்தது கட்சியின் தலைமைக்கு தெரியவந்தது.

இதேபோல் பாராளுமன்ற மேல்சபை தேர்தலின்போது வகேலாவின் ஆதரவாளர்கள் அணிமாறி வாக்களிக்க கூடும் என்ற அச்சம் காங்கிரஸ் மேலிடத்துக்கு உருவானது.

பழுத்த அரசியல்வாதியான வகேலாவுக்கு குஜராத் மாநில மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. இவரது தனிப்பட்ட செல்வாக்கு இங்குள்ள பத்துக்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிச்சயிக்கும் வகையில் இருப்பதால் வகேலாவின் எதிர்ப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத காங்கிரஸ் தலைமை அவர்மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வந்தது.

இந்நிலையில், தற்போது 77 வயதாகும் வகேலா, காந்தி நகரில் கடந்த 21-7-2017 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்கு பயந்து அவரது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வெகு சொற்பமான ஆதரவாளர்களிடையே பேசிய வகேலா, காங்கிரஸ் தலைமை தன்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும், தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் ராஜினாமா செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ள வகேலா மீண்டும் தனது தாய்க்கட்சியான பா.ஜ.க.வில் இணையலாம் என்று எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ள நிலையில், வேறு எந்தக் கட்சியிலும் நான் சேரப் போவதில்லை என்று அவர் அப்போது குறிப்பிட்டார். பின்னர், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களில் வகேலாவும் ஒருவர் என்று கருதப்பட்டது.

இந்நிலையில், தனது எம்.எல்.ஏ. பதவியை ஷங்கர்சிங் வகேலா இன்று ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகர் ராமம்லால் வோரே-யிடம் அவர் நேரில் அளித்தார்.

முன்னதாக, வகேலாவைப் போல் காங்கிரஸ் தலைமையை எதிர்த்து அணி திரண்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அப்போதும் வகேலா ராஜினாமா செய்யவில்லை. இன்று தனது பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக தனது தொகுதி மக்களின் கருத்தை அறிந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்ததாக குறிப்பிட்டார்.

பா.ஜ.க.வில் இணையப் போவதில்லை என்று முன்னர் குறிப்பிட்டிருந்த வகேலா, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி, துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் மற்றும் இன்னும் சில மந்திரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் தனது ராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்தது குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.