செய்திகள்

வாடிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் மூதாட்டி மரணம்

வாடிப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

வாடிப்பட்டி:

வாடிப்பட்டி அருகே  உள்ள குலசேகரன் கோட்டையைச் சேர்ந்தவர் பெரியசாமி.  இவரது மனைவி பெரியக்காள் (வயது 81).

இரு தினங்களுக்கு முன்பு  குலசேகரன் கோட்டையில் செல்லாயி அம்மன் கோவில்  திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு  போட்டி நடந்தது. அந்த சமயத்தில் பெரியக்காள் வீட்டில் இருந்து  அருகே உள்ள கடைக்கு  நடந்து சென்றார்.

அப்போது ஜல்லிக்கட்டில்  அவிழ்த்து விடப்பட்ட  காளை மாடு,  பெரியக்காளின் வலது கால் தொடைப் பகுதியில் முட்டித்தள்ளியது.  இதில்  படுகாயம் அடைந்த  அவரை மதுரை அரசு  ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அதன் பின்னர் பெரியக்காள், மதுரையில் உள்ள ஒரு தனியார்  ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு  அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக  வாடிப்பட்டி  போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.