வாடிப்பட்டி:
வாடிப்பட்டியில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்தது. அதன்பின் மாலை 5 மணிக்கு சிறுமலை பகுதியில் இருந்து மேகக் கூட்டங்கள் திரண்டு வந்தன. 6 மணிக்கு பலத்த சூறை காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக் காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. வாடிப்பட்டி பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பெருமாள் கோவில் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி பின்னர் வடிந்தது. மேலும் தாதம்பட்டி, நீரேத்தான், விராலிப்பட்டி, செம்மினிப்பட்டி, குட்லாடம்பட்டி, கச்சைகட்டி, பூச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கட்டக்குளம், வடுகப்பட்டி, மேட்டுநீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, சாணாம்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இரவு முழுவதும் இந்த பகுதியில் குளுமையான சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.