சத்திரப்பட்டி:
ஒட்டன்சத்திரம் தாலுகா, வடகாடு, வண்டிப்பாதை, கண்ணணூர், கோட்டை வெளி, பால்கடை, சிறுவாட்டுக்காடு, பெத்தேல்புரம் உள்பட 14 மலை கிராமங்களில் மா, பலா, வாழை, தென்னை மற்றும் எலுமிச்சை நடவு செய்துள்ளனர்.
தற்போது இப்பகுதிகளில் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் மட்டுமே எலுமிச்சை நடவு செய்யப்பட்டு வந்தது. சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, பெரிய கோட்டை, தேவத்தூர் உள்பட பல்வேறு ஊர்களிலும் எலுமிச்சை நடவு செய்துள்ளதால் எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் இப்பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் எலுமிச்சைக்கு போதியளவு கிராக்கி இல்லாத நிலை உள்ளது. இதன் காரணமாகவும் எலுமிச்சை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக மலைப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ எலுமிச்சை ரூ.100 முதல் ரூ.120 வரை மொத்த வியாபாரிகளால் ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது எலுமிச்சை வரத்து அதிகரிப்பு காரணமாக எலுமிச்சை மிகவும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒருகிலோ எலுமிச்சை ரூ.16 முதல் ரூ.20 வரை ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் எலுமிச்சை மார்க்கெட்டிலிருந்து தினமும் ஏராளமான டன் எலுமிச்சை கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.