செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மக்கள் மிகப்பெரிய அழிவு திட்டத்திற்குள் சிக்கி உள்ளார்கள்: உதயகுமார்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தென்பகுதி மக்கள் மிகப்பெரிய அழிவு திட்டத்திற்குள் சிக்கி உள்ளார்கள் என்று சுப.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாலை மலர்

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டக்குழுவை சேர்ந்த சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் உள்பட பலர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராயினர். நீதிபதி விடுப்பில் சென்றிருந்ததால் வழக்கு விசாரணை வருகிற டிசம்பர் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதி கேட்டு போராடுகிற மக்களை நீதிமன்றங்களுக்கும், போலீஸ் நிலையத்திற்கும் அலைக்கழிக்கப்படுகின்ற நிலை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நீட் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதாவை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். அனிதாவின் இறப்பு தற்கொலை அல்ல. அவள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அனிதாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்று வலியுறுத்தியும் இன்று (புதன்கிழமை) கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாலை 3 மணிக்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதலே நாங்கள் எதிர்த்து கொண்டிருக்கிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தேவையான கொதிகலன்கள், உதிரி பாகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்திலும், ஒப்பந்தங்கள் கொடுப்பதிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக நாங்கள் ஆதாரங்களுடன் சொன்னோம்.

ஆனால் எந்த விசாரணையும் நடத்தாமல் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து இந்த திட்டத்தை அமல்படுத்தி கொண்டிருந்தார்கள். பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தில் கூட முறைகேடு நடந்து கொண்டிருக்கிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மாபெரும் குளறுபடிகள் நடந்திருப்பதாக தற்போது தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் ஒரு மிகப்பெரிய மோசடி திட்டம். அங்கே குளறுபடிகள், கோளாறுகள் நிறைய நடந்திருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகளை வைத்து கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது. தென் மாவட்ட மக்களை எல்லாம் அழித்து விடக்கூடிய திட்டம் என்றெல்லாம் நாங்கள் எத்தனையோ முறை சொன்ன பிறகும் எந்த கருத்தையும் உள் வாங்காமல் காங்கிரஸ் அரசு திட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக இருந்தது.

அதன் பிறகு வந்த நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் அதிகமான அணு உலைகளையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்காக எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டிய தமிழக அரசு, டெல்லியை கண்டு அஞ்சுகிறது. தென்பகுதி மக்கள் மிகப்பெரிய அழிவு திட்டத்திற்குள் சிக்கி கொண்டிருக்கிறோம். இதுகுறித்து முழு விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.