நியூயார்க்:
பாகிஸ்தானில் பிறந்த சூபியா ஷஹ்னாஸ்(27) என்ற பெண் அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் உள்ள அரசு மருத்துவமனையின் நோயியல் பரிசோதனை ஆய்வகத்தில் கடந்த ஜூன் மாதம்வரை பணியாற்றி வந்தார்.
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் நோக்கத்துடன் பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட் வாங்கிய சூபியா கடந்த ஜூலை மாதம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்றார்.
அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் 10 ஆயிரம் டாலர்களுக்கு மேல் கொண்டுபோக கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் சூபியா ஷஹ்னாஸ் கையில் வைத்திருந்த 9500 டாலர்களுக்கான வருமான கணக்கை விமான நிலைய அதிகாரிகளிடம் அவரால் காட்ட முடியவில்லை.
இதையடுத்து, மன்ஹாட்டன் லாங் ஐலேண்ட் பகுதிக்கு உட்பட்ட பிரென்ட்வுட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்ததும், பாகிஸ்தான் வழியாக இஸ்தான்புல் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் சூபியாவின் கம்ப்யூட்டர் மூலம் தெரியவந்தது.
மேலும், வங்கிகளில் இருந்து மோசடியாக கடன் பெற்று கள்ளத்தனமாக ‘பிட்காயின்’ பண பரிமாற்றத்தின் மூலம் சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சுமார் 85 ஆயிரம் டாலர் நிதியுதவி செய்ததும் அம்பலமானது.
இதையடுத்து, சூபியா ஷஹ்னாசை கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவிக்க முடியாத குற்றச்சாட்டுகளின்கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வழக்கு விசாரணையில் இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ‘பிட்காயின்’ மூலம் கள்ளத்தனமான பணப் பரிமாற்றத்துக்கு 20 ஆண்டுகளும், வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்றதற்காக தனியாக 30 ஆண்டுகளும் என அதிகபட்சமாக 50 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் என்பது குறிப்பிடத்தக்கது.