அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
அவ்வகையில், நான்கைந்து மாநிலங்களில் இருந்து தொடரப்படும் மேல் முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்காக ஒரு குழுமம் அமைக்கப்பட்டு, அந்த குழுமம் ‘சர்க்யூட்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி இந்த சர்க்யூட் குழுமத்தில் 20 புதிய நீதிபதிகளை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இவர்களில் கென்ட்டுக்கி, டென்னெஸ்ஸி, ஓஹியோ மற்றும் மிச்சிகன் பகுதிகளில் இருந்துவரும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் ஆறாவது சர்க்யூட் நீதிபதி பதவியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமுல் தாப்பர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த நியமனத்துக்கு அமெரிக்க பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. 52 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற செனட்டில் அமுல் தாப்பரின் நியமனத்துக்கு ஆதரவாக கட்சி பேதங்களை கடந்து 44 பேர் வாக்களித்தனர்.
கடந்த 2006-2007-ம் ஆண்டு கென்ட்டுக்கி மாவட்ட அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டு பல வழக்குகளை திறம்பட நடத்திய அமுல் தாப்பர்(48), இந்த பதவியில் நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய வக்கீல் என்ற பெருமைக்குரியவராக அப்போது அறியப்பட்டார்.
அமெரிக்க அரசின் தீவிரவாத தடுப்பு, உள்நாட்டு பாதுகாப்பு துணைக் குழு, கொடுங்குற்றம் தடுப்பு குழு, சிறார் பாலியல் கொடுமைகள் தடுப்பு குழு ஆகியவற்றிலும் உறுப்பினராக இடம்பெற்றிருந்த இவர், சட்டத்துறை சார்ந்த உயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.