செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது சானியா-பெங் ஜோடி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலை மலர்

வாஷிங்டன்:

டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் நான்காம்நிலையில் இருக்கும் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி, ஐந்தாம்நிலை ஜோடியான ஹங்கேரியின் திமியா பாபோஸ் - செக் குடியரசின் அண்ட்ரியா ஹ்லவகோவா இணையை எதிர்கொண்டது. இந்த போட்டி சுமார் ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் நீடித்தது.

இப்போட்டியின் முதல் செட்டை 7-6 என்ற புள்ளிக்கணக்கில் சானியா - பெங் ஜோடி போராடி வென்றது. அடுத்த சுற்றிலும் பாபோஸ் - அண்ட்ரியா ஜோடி, சானியா - பெங் ஜோடிக்கு ஈடுகொடுத்து விளையாடியது. இருப்பினும், சானியா - பெங் ஜோடி இந்த செட்டையும் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் வெற்றி பெற்ற சானியா - பெங் ஜோடி இத்தொடரின் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் சானியா- பெங் ஜோடி, இரண்டாம் நிலை ஜோடியான தைவானின் சான் யுங்-ஜான் - சுவிஸர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணையை எதிர்கொள்கிறது. இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் செக் குடியரசின் லூசி ரடேக்கா - கட்ரினா சினியகோவா ஜோடி, அதே நாட்டைச் சேர்ந்த லூசி ஸபரோவா - பார்போரா ஸ்ட்ரைகோவா ஜோடியுடன் பலப்பரீட்சை செய்கிறது.