செய்திகள்

பாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல்: பயங்கரவாத குழு தளபதி பலி

பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் தாக்குதல் மூலம் பயங்கரவாத குழு தளபதி அபுபக்கர் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தாக்குதல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

மாலை மலர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்று ஹக்கானி பயங்கரவாத குழு. இந்த பயங்கரவாத குழுவின் முக்கிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் அபுபக்கர். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்.

இந்த நிலையில், கைபர் பக்துங்வா மாகாணத்தின் ஒர்காசி மற்றும் ஹங்கு மாவட்டங்களின் எல்லையில் அமைந்து உள்ள ஸ்பென் தால் என்ற பழங்குடியின பகுதியில் ஒரு வீட்டில் அபுபக்கர் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நேற்று ஆளில்லா விமானம் ஒன்று அங்கு விரைந்து அபுபக்கர் பதுங்கி இருந்த அந்த வீட்டின் மீது 2 குண்டுகளை போட்டதாகவும், இதில் அபுபக்கர் பலியாகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தாக்குதல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

கடந்த 31-ந் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்து உள்ள பகுதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை ஓட்டி வந்து வெடிக்க செய்ததில் 150 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஹக்கானி பயங்கரவாத குழுதான் காரணம் என ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.