செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் குத்திக்கொலை - உறவினர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த சரண்ஜித் சிங் கொலை வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் தன்னாட்சி நகரமான குயின்ஸ்சில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் சரண்ஜித் சிங் (வயது 26). இந்தியாவை சேர்ந்தவர்.

கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இவர், அங்கு தனது உறவினரான லவ்தீப் சிங் (24) உடன் ஒரே வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 26-ந் தேதி அன்று வீட்டில் இருந்தபோது சரண்ஜித் சிங் மற்றும் லவ்தீப் சிங் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த லவ்தீப் சிங், கூர்மையான ஆயுதத்தால் சரண்ஜித் சிங்கின் கழுத்து மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் லவ்தீப் சிங்கை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் அவர், தான் தனது உறவினரை குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருப்பினும் கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரவில்லை.

சரண்ஜித் சிங் கொலை செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லவ்தீப் சிங் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கோர்ட்டில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.