வாஷிங்டன்:
இங்கிலாந்து வாழ் ரஷிய உளவாளி நச்சுப்பொருள் தாக்குதலுக்கு ஆளானார். இதில் ரஷியா மீது இங்கிலாந்து எடுத்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்து உள்ளது.
ரஷிய நாட்டை சேர்ந்தவர், உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் (வயது 66). இவர் 1990-களில் அந்த நாட்டின் ராணுவ உளவு பிரிவில் பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் இங்கிலாந்து நாட்டின் உளவுப்பிரிவிலும் ரகசியமாக சேர்ந்து, அதற்காகவும் வேலை பார்த்தார்.
செர்கெய், ரஷிய உளவாளி என்ற நிலையில் தன் நாட்டைப்பற்றி கிடைக்கிற ரகசிய தகவல்களை அப்படியே இங்கிலாந்துக்கும் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில் ரஷிய நிர்வாகம் இதை மோப்பம் பிடித்தது. அதைத் தொடர்ந்து செர்கெய், கைது செய்யப்பட்டார். ராணுவ ரகசியங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின்பேரில், அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், உளவுக்கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ், செர்கெய்க்கு ரஷியா பொது மன்னிப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அந்த நாடு அவருக்கு புகலிடம் அளித்தது.
அதைத் தொடர்ந்து செர்கெய், அங்கு வில்ட்ஷயர் மாகாணத்தில் தனது மகள் யுலியாவுடன் (33) வசித்து வந்தார்.
இந்த நிலையில், அவரும், அவரது மகள் யுலியாவும் அங்கு உள்ள பூங்கா ஒன்றில் கடந்த 4-ந் தேதி மயங்கிச்சரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்கு உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் மர்ம நச்சுப்பொருள் தாக்குதலுக்கு ஆளானதால், ஆபத்தான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரரும் பாதிக்கப்பட்டு உள்ளார்.
இவர்கள் நச்சுப்பொருள் தாக்குதலுக்கு ஆளானதற்கு காரணம், ரஷியாதான் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கருதுகிறார்.
இது தொடர்பாக ரஷியா விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கெடுவும் விதித்தார். கெடு முடிவதற்குள் ரஷியா விளக்கம் தராவிட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கவும் செய்தார்.
உளவாளி மற்றும் அவரது மகள் மீதான நச்சுப்பொருள் தாக்குதலுக்கு தான் பொறுப்பு அல்ல என்று ரஷியா கூறினாலும், நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ரஷியாவின் நச்சுப்பொருள் எப்படி அவர்கள்மீது பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதற்கு விளக்கம் அளிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து இங்கிலாந்தில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் 23 பேர் வெளியேற பிரதமர் தெரசா மே நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார். கடந்த 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், இங்கிலாந்தில் இருந்து இப்படி ஒரே நேரத்தில் ஒரு நாட்டின் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இங்கிலாந்தின் இந்த நடவடிக்கைக்கு அதன் நட்பு நாடான அமெரிக்கா முழு ஆதரவு தெரிவித்து உள்ளது.
இதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறியதாவது:-
அமெரிக்கா, தனது நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்துடன் ஒன்றுபட்டு நிற்கிறது. இங்கிலாந்து குடிமகன் (செர்கெய்) மீதும், அவரது மகள் மீதும் நடத்தப்பட்ட பொறுப்பற்ற நச்சுப்பொருள் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்னும் இங்கிலாந்தின் கருத்தை அமெரிக்காவும் ஏற்கிறது. ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்.
இத்தகைய தாக்குதல் இனியொரு முறை நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அமெரிக்கா தனது நெருங்கிய கூட்டாளிகளுடன் இணைந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலியும், ரஷியாவுக்கு எதிரான கருத்துக்களை உறுதிபட வெளிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இங்கிலாந்தில் நச்சுப்பொருள் தாக்குதல் நடைபெற்றிருப்பதற்கு ரஷியாதான் பொறுப்பு. இதில் இங்கிலாந்தின் நிலைப்பாட்டை அமெரிக்கா நம்புகிறது” என குறிப்பிட்டார்.