செய்திகள்

கோரக்பூர்: குழந்தைகள் பலியான விவகாரத்தில் டாக்டர் கபில்கான் கைது

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில்கானை சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கைது செய்தனர்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 11-ம் தேதிகளில் 30க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உத்தரப்பிரதேச மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று கைது செய்தனர். 

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழுவினர் கூறுகையில், கோரக்பூர் மருத்துவ கல்லூரியில் குழந்தைகள் இறந்தது தொடர்பாக, மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி ஆகியோரை கடந்த 29-ம் தேதி கைது செய்து விசாரித்து வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்படும் 3-வது நபர் டாக்டர் கபில்கான். இந்த வழக்கில் இது ஒரு மிக பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது, கைது செய்யப்பட்ட டாக்டர் கபில் கானை போலீசில் ஒப்படைத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர். 

கோரக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பில் டாக்டர் கபில் கான் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.