செய்திகள்

உ.பி: மாஜிஸ்திரேட்டை இடம் மாற்றக் கோரி மந்திரி தர்ணா - அரசுக்கு நெருக்கடி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மந்திரியாக உள்ள ஓம் பிரகாஷ் ராஜ்பார் தனது கோரிக்கைகளை கண்டுகொள்ளாத மாஜிஸ்திரேட்டை இடம் மாற்றக் கோரி தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகிக்கிறார். கடந்த இரு மாதங்களாகவே காசிப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் கத்ரி-யை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பொது இடங்களில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து, பொறுமையிழந்த ராஜ்பார், மாஜிஸ்திரேட் கத்ரி மீது  19 புகார் அடங்கிய மனுக்களை அம்மாநில பா.ஜ.க செயலர்களிடம் கடந்த மாதம் அளித்துள்ளார்.

மேலும், மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் கத்ரி-யை மாற்றுவதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கடந்த மாதம் 27-ம் தேதி நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். ஆனால், ராஜ்பரின் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை.

இதனால், கொதிப்படைந்துள்ள ராஜ்பர் காசிப்பூரில் உள்ள பூங்காவில் நாளை தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். இதே கோரிக்கையை முன்வைத்து சஹூராபாத் எம்.எல்.ஏ-வும் தர்ணாவில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.

மந்திரி ஒருவர் அரசுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது மாநில அரசுக்கு இக்கட்டான சூழ்நிலையை கொடுத்துள்ளது.