செய்திகள்

ராகுல்காந்தியை ‘பப்பு’ என்று அழைத்த காங். தலைவர் நீக்கம்

ராகுல் காந்தியை ‘பப்பு’ என அழைத்த காங்கிரஸ் தலைவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

மீரட்:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க சென்றபோது கைது செய்யப்பட்டார்.

இதைக் கண்டித்து மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வினய்பிரதான் ‘வாட்ஸ் அப்’பில் தகவல் வெளியிட்டார்.

அதில், ராகுல் காந்தியின் முதல் கவனம் நாட்டு நலன் மீதான அக்கறைதான் என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, “பப்பு அதானி, அம்பானி, மல்லையா ஆகியோருடன் கை கோர்க்கவில்லை. பிரதமரோ, மந்திரியோ சாலையில் இறங்கி செய்யாததை செய்து இருக்கிறார்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.

ராகுல் காந்தியை பாராட்டும் போது, ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். பப்பு என்றால் சிறுவன், சிறு பையன் என அர்த்தம் வருகிறது.

இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியது காங்கிரசாரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாவட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமகிருஷ்ண திரிவேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில் ‘உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கு பதில் அளிக்குமாறு’ கூறியுள்ளார்.

வினய்பிரதான் பதிலில், நான் அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை. நான் ராகுல் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

அவரது விளக்கத்தை ஏற்காத ஒழுங்கு நடவடிக்கை குழு வினய் பிரதானை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடியோடு நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்தது.