திருமண மண்டபத்தில் அதிகாரிகள் ஆய்வு நடந்தது. 
செய்திகள்

சுகாதாரமற்ற கோழிக்கடை, ஓட்டல், திருமண மண்டபத்துக்கு அபராதம்

திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்த கோழிக்கறி கடை, சிறிய ஓட்டல் மற்றும் திருமண மண்டபத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் தோறும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் சுகாதாரத்துறையினர் மாவட்டம் முழுவதும் சுகாதாரமற்று டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் மேற்பார்வையில் திருவள்ளூர் வட்டாட்சியர் தமிழ் செல்வன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மணவாளநகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்த கோழிக்கறி கடை, சிறிய ஓட்டல் மற்றும் திருமண மண்டபத்திற்கு மொத்தமாக ரூ. 24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின் போது மணவாள நகர் ஊராட்சி செயலாளர் மகேந்திரன் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.