லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்திருந்தார். இதனை அடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.
மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்தார்.
உன்னாவ் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரா சிங்கின் உடல்நிலை கடந்த 10-ம் தேதி இரவு திடீரென்று மோசம் அடைந்ததால் உன்னாவ் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 11-ம் தேதி அவர் உயிரிழந்தார். தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சுரேந்திரா சிங் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. இந்நிலையில், எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் செங்காரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் மனைவி சங்கீதா செங்கார் இன்று டிஜிபி ஓபி சிங்கை சந்தித்து தனது கணவருக்கு நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், 'இந்த சம்பவத்தின் பின்னால் அரசியல் நோக்கம் உள்ளது. எனது கணவருக்கும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண்ணிற்கும் உண்மை கண்டறியும் சோதனை (நார்கோ டெஸ்ட்) செய்ய வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். என் கணவர் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை. எனினும் அவர் குற்றவாளி என கூறப்படுகிறார். இது எங்கள் குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளது. எங்கள் மகள்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்' என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
இதற்கிடையே, கற்பழிப்பு வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது. அந்த மனுவில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. #UnnaoRapeCase #supremecourt