திருச்சி:
சேலம் பெரியார் பல்கலைக் கழக மாணவி வளர்மதி (வயது 20). இந்திய மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த இவர் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி சக மாணவர்களான தினேஷ் (25), தீபக் (22), தினேஷ்குமார் (19), கார்த்திக் (19), சூரியவர்மன் (24), சுவாதி (19) ஆகியோருடன் சேர்ந்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக திருச்சி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்தில் வைத்து வளர்மதி மற்றும் மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். தப்பு அடித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.
கடந்த ஒரு மாதமாக சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வளர்மதி சிறையில் பெண் சிறை வார்டன்கள் தன்னை தினமும் 6 முறை ஆடைகளை அவிழ்த்து சோதனை நடத்தியதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும் தனக்கு நாப்கின் தராமல் சிறையில் வார்டன்கள் கொடுமைப்படுத்தியதாகவும், விடுதலையாகி வெளியே வந்த போது குற்றச்சாட்டுக்களை கூறினார். மேலும் இது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த ஹென்ரி திபாக்னே மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதில் சிறைக்காவலில் இருப்பவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு சிறையில் நடந்த கொடுமை வெட்க கேடாது. பெண் சிறை வார்டன்களால் அவர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. விஜயக்குமார் திருச்சி பெண்கள் சிறையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பத்திரிகைகளில் வந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு திருச்சி பெண்கள் சிறையில் பல்கலைக்கழக மாணவி வளர்மதியின் ஆடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகார் மீது தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. விசாரணை நடத்த வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை 6 மாதத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.