செய்திகள்

பல்கலைக்கழக மாணவரிடம் செல்போன் பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

திருபுவனை அருகே நூதனமாக ஏமாற்றி பல்கலைக்கழக மாணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி:

திருபுவனையை அடுத்த சன்னியாசிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திர பிரதாப் (வயது 24). இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

அதில் ஒருவன் தேவேந்திர பிரதாப்பிடம் அவசரமாக பேச வேண்டும் என செல்போனை கேட்டுள்ளான். அதற்கு அவர் தனது செல்போனை கொடுத்தார்.

ஆனால், அவன் போனில் பேசுவது போல் நடித்து தனது நண்பன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவேந்திர பிரதாப் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேவேந்திர பிரதாப் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது தனது செல்போனை பறித்து சென்ற வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் அங்கு நின்று கொண்டிருந்தது.

இந்த தகவலை அவர் லாஸ்பேட்டை போலீ சாருக்கு தெரிவித்தார். அந்த நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் குமரகுரு பள்ளத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பன் பிறைசூடன் (23). சேர்ந்து செல்போனை பறித்து சென்றோம் என்பதை ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT