புதுடெல்லி:
பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் வெற்றி பெற்ற குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்வு செய்தல், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் மக்களவை தொகுதி எம்.பி கிருஷ்ணா ராஜ் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார். அவர் வேளாண் துறை மந்திரியாக இருந்து வருகிறார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உடல் நிலை காரணமாக் கிருஷ்ணா ராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதைக்கண்ட சக மந்திரிகள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராம்லோகியா மருத்துவமனையில் மந்திரி கிருஷ்ணா ராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய மந்திரி கிருஷ்ணா ராஜ் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.