கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மால்டா அரசு தலைமை மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் பணியிடம் காலியாக இருந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் அனாதை பிணங்களை கணக்கெடுத்து வைப்பது, பிணவறையில் இருக்கும் பிணங்களை அப்புறப்படுத்துவது, உரியவர்களிடன் ஒப்படைப்பது உள்ளிட்ட வேலைகளை உதவியாளர்கள் செய்ய வேண்டியது இருக்கும்.
இந்நிலையில், இந்த தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. எட்டாம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 315 பேர் மொத்தம் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் ஆராய்ச்சி படிப்பு எனும் பி.எச்.டி, எம்.பில் மற்றும் முதுகலைப்பட்டதாரிகளும் அடக்கம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எட்டாம் வகுப்பு மட்டுமே தகுதியான இந்த வேலைக்கு பி.எச்.டி வரை படித்தவர்களும் விண்ணப்பித்திருப்பது நாட்டில் பட்டதாரிகளுக்கு சரியான வேலை அமையாத நிலையை காட்டுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலுவலக துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு பி.எச்.டி முடித்தவர்கள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.