செய்திகள்

படிக்காததை தாய் சுட்டிக்காட்டியதால் எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை

அரியாங்குப்பத்தில் படிக்காததை தாய் சுட்டிக்காட்டியதால் எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

பாகூர்:

அரியாங்குப்பம் காமராஜர் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிராஜ். இவரது மனைவி கஸ்தூரிதேவி. இவர்களுக்கு புருஷோத் (வயது 18) உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

பழனிராஜ் தற்போது துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். புருஷோத் கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். ஆனால், அதில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் மேற்கொண்டு படிக்க வில்லை.

இந்த நிலையில் அவருடன் படித்த சில மாணவர்கள் பிளஸ்-2 முடித்து விட்டனர். இதற்காக புருஷோத்தை சந்தித்து சாக்லேட் கொடுத்தனர்.

அப்போது தாயார் கஸ்தூரிதேவி புருஷோத்திடம் நீயும் படித்திருந்தால் இதே போல் பிளஸ்-2 தேர்வாகி கல்லூரிக்கு சென்றிருக்கலாம் என்று கூறினார்.

தாயார் சொன்ன இந்த வார்த்தை புருஷோத்துக்கு வேதனையை ஏற்படுத்தியது. இதனால் எலி மருந்தை சாப்பிட்டார். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். குணம் அடைந்து வீடு திரும்பினார்.

ஆனாலும், தொடர்ந்து அவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. எனவே, ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இது தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.