சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபத்தில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த இந்த கோவில் வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து உண்டியலில் பணத்தை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் அப்பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மாலை கோவில் பூசாரி சேகர் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு சாமிகும்பிட வந்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டும், உண்டியல் மாயமாகி இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். கோவில் உண்டியல் 50 மீட்டர் தூரத்தில் புதரில் வீசப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆதிமூலம் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் உண்டியல் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படையினர் தீவிரமாக கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்மண்டபத்தில் உள்ள சாராய கடையில் 3 வாலிபர்கள் உண்டியல் பணத்தை பங்கு போட்டு கொண்டு இருந்தனர். அப்போது சாதாரண உடையில் கண்காணித்த போலீசார் அந்த 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தமிழக பகுதியான பாக்கம்கூட்டுரோட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது23), சந்தோஷ் (19) மற்றும் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அருணாசலம்(19) என்பதும் இவர்கள் கல்மண்டபம் அய்யனார் கோவில் உண்டியலை கொள்ளையடித்து பணத்தை பங்கு போட்டதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் கூலித்தொழிலாளிகளான இவர்கள் வேலை இல்லாத நாட்களில் மது குடிக்க பணம் தேவைப்படும் போது பகல் வேளையில் கோவில்களை நோட்டமிட்டு இரவில் உண்டியலை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது.
அதுபோல சம்பவத்தன்றுஇவர்கள் திருபுவனையில் சினிமா பார்த்து விட்டு பின்னர் கல்மண்டபம் வந்தனர் அங்கு சாராய கடையில் சாராயம் குடித்துள்ளனர். அப்போது அங்குள்ள அய்யனார் கோவில் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.
அதன்படி நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை கொள்ளையடித்து சென்று அதில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு உண்டியலை புதரில் வீசி சென்ற இவர்கள் பணத்தை பங்கு பிரிக்கும் போது திட்டம் போட்ட சாராயக்கடையிலேயே சிக்கி கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் உண்டியல் பணம் ரூ.4700 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.