சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் பயணிகளின் விரைவு சேவைக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
உயர்மட்ட பாதையில் முதல் கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி தொடங்கியது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சின்னமலை- விமான நிலையம் வழித்தடத்தில் பயணிகள் ரெயில் போக்குவரத்தை 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கி வைத்தார்.
2-வது கட்டமாக திருமங்கலம் - சென்டிரல் இடையிலான சுரங்க ரெயில் திட்டத்தில் திருமங்கலம்- நேருபூங்கா வரையில் 7.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பூமிக்கு அடியில் 60 அடி ஆழத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றன.
இரவு-பகலாக நடந்த இந்த பணிகள் முடிந்ததும் தண்டவாளங்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு சுரங்க பாதையில் ரெயில் சோதனை ஓட்டம், வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த வழித்தடத்தில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டன.
ரெயில் நிலையங்களில் குளுகுளு வசதிகளுடன், காற்றோட்டத்துடன் கூடிய தளங்கள் வெளிச்சத்துக்காக இரவை பகலாக்கும் மின்விளக்குகள், குடிநீர் வசதிகள், கண்காணிப்பு காமிராக்கள், லிப்ட் எஸ்கலேட்டர், படிக்கட்டுகள் உள்பட நவீன முறையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மெட்ரோ சுரங்க ரெயில் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இதற்காக திருமங்கலம் ரெயில் நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தலும், விழா மேடையும் அமைக்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழா மேடை யில்மறைந்த ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதலாவது ரெயில் திருமங்கலத்தில் இருந்து புறப்பட்டும் 6 ரெயில் நிலையங்களை கடந்து 7-வதாக நேரு பூங்காவை அடைந்தது.
முதலாவது ரெயிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மற்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ரெயிலில் முதல் பயணம் செய்யும் ஆவலுடன் ஏராளமான பயணிகள் காத்து இருந்தனர். அவர்களும் ரீசார்ஜ் டோக்கன் வாங்கி ரெயிலில் பயணம் செய்தனர். ரெயில் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நின்று புறப்படும் போது அங்கிருந்த பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
சுரங்க ரெயில் நிலையத்தையோ, ரெயில் ஓடுவதையோ வெளியில் இருந்து வேடிக்கை பார்க்க முடியாது. டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் செல்ல முடியும் என்பதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடக்க விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், அரசு முதன்மை திட்ட செயலாளர் ச.கிருஷ்ணன், மெட்ரோ சுரங்க தலைமை பொது மேலாளர் வி.கே.சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களும், பயணிகளும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.