சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள சுயம்பு லிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது34). மரம் ஏறும் தொழிலாளியான இவருக்கு மீனாட்சி (32) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக முனீஸ்வரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மாமனார் சிவலிங்கம் (80) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மருமகனும், மாமனாரும் தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று இரவும் இந்த பிரச்சினை ஏற்படவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் முனீஸ்வரனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கணவரை தந்தையே கொலை செய்தது மீனாட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் சாயல்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கனகாபாய் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து முனீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.