புதுடெல்லி:
மத்திய மந்திரி உமா பாரதி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
புனித நதியான கங்கை நதியை சுத்தப்படுத்தும் விஷயத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கையை சீரமைக்கும் திட்டங்கள் உடனே தொடங்கப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் மாதத்துக்குள் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். நான் பெறும் திட்டங்கள் பற்றி மட்டும் பேசவில்லை. அவை திட்ட மிட்டப்படி அமல்படுத்தப்பட வேண்டும்.
கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம் குறிப்பிட்ட காலத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அது நடைபெறாவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குவதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.
உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
இவ்வாறு மத்திய மந்திரி உமாபாரதி கூறினார். உமா பாரதியின் இந்த பேச்சு அவர் மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலாக கருதப்படுகிறது.