மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.
இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 6-ம் தேதி நிரவ் மோடி வீடியோ கான்பிரன்சிங் மூலம் சிறையில் இருந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது சிறை காவலை 28 நாட்கள் நீட்டித்து நீதிபதி அர்புத்நாத் உத்தரவிட்டிருந்தார்.
அவரது சிறை காவல் முடிவடைந்த நிலையில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் அவர் இன்று வெஸ்ட்மின்ஸ்ட்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவல் மேலும் 28 நாட்கள் (ஜனவரி 2-ம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.