செய்திகள்

திருப்பதி, பத்மாவதி தாயார் கோவில்களில் யுகாதி ஆஸ்தானம் வருகிற 18-ந்தேதி நடக்கிறது

திருப்பதி ஏழுமலையான், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்களில் வருகிற 18-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்க உள்ளது.

மாலை மலர்

திருப்பதி ஏழுமலையான், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில்களில் வருகிற 18-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 18-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி 13-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. 13-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கோவிலின் மகா துவாரத்தில் இருந்து மூலவர் சன்னதி வரை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. மூலவர் சன்னதியை அர்ச்சர்கள் மட்டுமே சுத்தம் செய்வார்கள்.

கோவிலில் சுத்தம் செய்யும் பணி நடந்ததும், மூலவருக்கு நைவேத்தியம், சிறப்புப்பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்குமேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே 13-ந்தேதி கோவிலில் நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 18-ந்தேதி யுகாதி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணியளவில் சுப்ரபாத சேவை, சகஸ்ர நாமார்ச்சனை நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 3 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அதைத்தொடர்ந்து கோவிலில் இரவு 8 மணிக்கு பஞ்சாங்க சிரவணமும், யுகாதி ஆஸ்தானமும் நடக்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 18-ந்தேதி நடக்கயிருந்த ஆர்ஜித சேவைகளான குங்கும அர்ச்சனை, சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.