உடுமலை:
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, சிங்கவால் குரங்கு, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இதில் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மேல்குருமலை, கோணலாறு உள்ளிட்ட பகுதிகளில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் பரவலாக உள்ளது. இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இதனால் மாமிச உண்ணிகள் மட்டுமே இங்கு வசித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த மாதம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் காடுகளும் பச்சை பசேல் என காட்சியளித்தன. இதையடுத்து கேரள வனப்பகுதிக்கு சென்ற வன விலங்குகள் இங்கு திரும்பின.
அத்துடன் மாமிச உண்ணிகளும் இறையைத் தேடி வனப்பகுதிக்குள் உலா வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் உடுமலை வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. அவை தனது உணவு சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடிப்பதற்காக ஆறுகளுக்கு வருகின்றன. இதனை மலையேற்ற பயிற்சிக்கு செல்கின்ற வனஆர்வலர்கள், மலைவாழ்மக்கள் மற்றும் வனத்துறையினர் கண்டு ரசிக்கின்றனர்.