உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளது சாலையூர். இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த பகுதி கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வினியோம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 300 பேர் இன்று காலை உடுமலை- ஆனைமலை செல்லும் சாலையில் அமர்ந்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் அலுவலர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராஜ் மற்றும் டி.எஸ்.பி. விவேகானந்தன் தளி இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.