போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின். 
செய்திகள்

குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கோரி உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாலை மலர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்பட்ட குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்தது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது நடவடிக்கையும் தொடர்கிறது.

தேர்வு முறைகேட்டை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் பாரிமுனையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணயம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. என்றாலும் போலீஸ் தடையை மீறி டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் அருகில் பாரிமுனை சந்திப்பில் இன்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக பாரிமுனை பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது.

காலை 11 மணியளவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளும் கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

மேடையில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களைப் பார்த்த கையசைத்தார். அவரைக் கண்டதும் தொண்டர்கள் வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். பின்னர் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தேர்வு முறைகேட்டுக்கு காரணமானதாக கூறி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. “தேர்வாணைய தேர்வு போட்டி தேர்வா?... பெட்டி தேர்வா?”, “வெற்றுப் பேப்பர் பாசாகுது, படித்தவன் வாழ்க்கை மிஸ் ஆகுது” என்பது போன்ற கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. உதயநிதி ஸ்டாலினும் கோ‌ஷமிட்டார்.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் இங்கு திரண்டிருக்கும் தாய்மார்களே. இந்த போராட்டத்தின் வெற்றிக்கு காரணமானவர்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதாக முந்திரிகொட்டை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இளைஞர்கள் பலர் அரசு வேலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தேர்வு எழுதி வரும் நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுள்ள மோசடி பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும். கிராம நிர்வாக அதிகாரி முதல் மாவட்ட ஆட்சி தலைவர் வரையில் அரசு தேர்வு எழுதியே பணிக்கு வருகிறார்கள்.

தரமானவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு வந்தால்தான் தரமான ஆட்சி நடக்கும். ஆனால் இங்கு தரமான ஆட்சி நடைபெறவில்லை. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த மையத்தை தேர்வு செய்தவர்கள் திதி கொடுக்க வந்ததாகவும் அப்படியே தேர்வு எழுதியதாகவும் கூறி உள்ளனர். இதையும் ஆட்சியில் உள்ளவர்கள் நம்பியுள்ளனர்.

இந்த முறைகேட்டை முதலில் அம்பலம்படுத்தியது நமது தலைவர்தான். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். ஆனால் அதில் எந்த முடிவும் வரவில்லை.

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் முறைகேடு நடக்கிறது. தெம்பு இல்லாத ஆட்சி நடக்கிறது. மோடியின் அடிமைகளாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத வெற்றியை பெற்றுள்ளோம். முறையாக தேர்தல் நடந்து இருந்தால் 90 சதவீத வெற்றியை பெற்று இருப்போம்.

இன்னும் 12 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் இடைவேளைதான். சட்டமன்ற தேர்தலே இறுதியானது. 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மக்கள் நல்ல முடிவை எடுத்து தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பார்கள். இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக அடுத்த கட்ட போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர், ரவிசந்திரன், ரங்கநாதன், தாயகம் கவி, இளைஞர் அணி மாநில துணை செயலாளர் வக்கீல் ஜோயல்.

மாணவர் அணி நிர்வாகிகள் கவிகணேசன், மகேஷ் குமார், புழல் நாராயணன், கவிதா நாராயணன், சித்திக் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.