செய்திகள்

ஓடும் பஸ்சில் சில்மிஷம் செய்தவருக்கு தர்மஅடி கொடுத்த இளம்பெண்

உடன்குடி அருகே ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவருக்கு தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

உடன்குடி:

நெல்லையில் இருந்து கருங்குளம், புதுக்குடி, ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு சம்பவத்தன்று ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு டிப் டாப் ஆசாமி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். 

அவரது முன் இருக்கையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அமர்ந்து இருந்து பயணம் செய்தார். கருங்குளத்தை கடந்து பஸ் வந்து கொண்டிருந்த போது அந்த இளம்பெண் அடிக்கடி பின்னால் திரும்பி டிப் டாப் ஆசாமியை முறைத்தபடி பார்த்து கொண்டே வந்தார்.

பஸ் நாசரேத்தை நெருங்கி வருவதற்கு முன்பு அந்த இளம்பெண் ஆவேசமாக எழுந்தார். அவர் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து டிப் டாப் ஆசாமியை அடித்தார். அக்காள், தங்கையுடன் பிறக்கவில்லையா? பஸ்சில் ஒரு பெண் தனியாக பயணம் செய்ய முடியாதா? என்று திட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பஸ் நின்றதும் அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். அப்போது தான் பஸ்சில் அந்த பெண்ணிடம் வாலிபர் சில்மிஷம் செய்தவாறு வந்தது தெரியவந்தது.