செய்திகள்

லண்டனில் உபேர் நிறுவனத்தின் உரிமத்தை புதுப்பிக்க பிரிட்டன் அரசு மறுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் புக்கிங் நிறுவனமான உபேரின் உரிமத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக, புதுப்பிக்க பிரிட்டன் அரசு மறுத்துள்ளது.

மாலை மலர்

லண்டன்:

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பிரபல கார் புக்கிங் நிறுவனம், உபேர். இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்துகொண்டே கைபேசியின் மூலம் கார் புக்கிங் செய்யலாம். இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இயங்குவதற்காக அந்தந்த நாட்டு அரசிடம் அனுமதி பெற்று உரிமம் பெற வேண்டும். 

லண்டனில் இந்நிறுவனத்தின் உரிமம் வருகிற 30ம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உபேரின் அணுகுமுறை மற்றும் நடத்தையானது அந்நிறுவனத்தின் பெருநிறுவன பொறுப்பில்லாமையை நிரூபிக்கின்றது. மேலும் பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை எனவும் அரசு காரணம் கூறியுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் லண்டன் நகரில் இந்நிறுவனம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்னும் மூன்று வாரங்களுக்கு லண்டன் நகரில் அந்நிறுவனம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.