செய்திகள்

இந்திய வேகப்பந்து வீச்சை பார்க்க சிறப்பாக உள்ளது: ஆஸி. U19 பயிற்சியாளர்

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி்ல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அபார திறமையை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலியா U19 அணி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். #U19CWC

மாலை மலர்

நியூசிலாந்தில் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா இளைஞர்கள் பலப்ரீட்சை நடத்துகிறார்கள்.

இந்திய அணி என்றாலே சுழற்பந்து வீச்சு பெயர் போன அணி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் தற்போதைய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் கம்லேஷ் நகர்கோட்டி, ஷிவம் மவி அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். தொடர்ந்து 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் இவர்கள், துல்லியமாக வீசி எதிரணியை திணறடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை பார்க்க சிறப்பாக உள்ளது என ஆஸ்திரேலியா U19 அணியின் தலைமை பயிற்சியாளர் ரியான் ஹாரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து ரியான் ஹாரிஸ் கூறுகையில் ‘‘இந்தியாவின் சுழற்பந்து வீச்சை பற்றி பேசாமல், வேகப்பந்து வீச்சை பற்றி பேசுவது மிகவும் சிறப்பாக உள்ளது. இந்திய அணி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அழகான ஆக்சனுடன், அதிக வேகத்திலும் பந்து வீசுகிறார்கள். அவர்கள் பந்து வீச ஓடி வருவதை நான் பார்த்தேன். அது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. இது எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.

நகர்கோட்டி, மவி மட்டுமல்ல. ஏராளமான இளைஞர்கள் 135 முதல் 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார்கள். இது சிறந்த சவால். இந்தியாவில் இருந்து இதுபோன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் வருவதை பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. வழக்கமாக இந்தியாவில் இருந்து வரும் சுழற்பந்து வீச்சாளரை பற்றிதான் நாம் பேசுவோம்’’ என்றார்.