மதுரை:
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) முறைகேடுகள் நாளுக்கு நாள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முறை கேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மோசடியாக பணம் கொடுத்து முறைகேடாக வெற்றி பெற்றவர்கள் பலர் தினமும் சிக்கி வரும் நிலையில் மதுரையில் நடந்த தட்டச்சர் தேர்விலும் ஆள் மாறாட்ட மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சென்னையில் அரசு தேர்வுத்துறையில் உள்ள தொழில் நுட்ப துறையில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர் மரகதம். இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை. ஆனால் தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இதனால் இவர் தட்டச்சர் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற்றார்? என்ற சந்தேகம் மேல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அழைத்து தட்டச்சு செய்ய கூறினர். ஆனால் மரகதம் தட்டச்சு செய்ய முடியாமல் திணறினார். பின்னர் நடத்திய விசாரணையில், மரகதம் ஆள் மாறாட்டம் செய்து தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
மரகதம் மதுரை விளாங்குடியைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் சாலையில் உள்ள ஒரு இன்ஸ்டிடியூட்டில் தட்டச்சு பழகினார். அப்போது தட்டச்சு படிக்க வந்த விக்னேஷ் என்பவர் மரகதம் தேர்ச்சி பெற உதவியது தெரியவந்தது.
இந்த தேர்வு மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்ததால் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் அரசு தேர்வுத்துறை உதவி இயக்குநர் அழகு அரசு புகார் செய்தார்.
புகாரின் பேரில் பெண் ஊழியர் மரகதம் மற்றும் விக்னேஷ், இன்ஸ்டிடியூட் உரிமையாளர் நாதன் ஆகிய 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்டிடியூட்டில் இதுவரை படித்தவர்கள், சான்றிதழ் பெற்றவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தட்டச்சர் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததும் மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.