செங்கோட்டை:
தூத்துக்குடி காமராஜர் புரம், அழகாமுத்துநகர், முள்ளக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேர் 2 வேனில் நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு குளிக்க சென்றனர். தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகமாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தின் அனைத்து அருவிக் கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்து இருந்தது. இதனை பார்த்த அவர்கள், வேறு எங்கு செல்லலாம் என நினைத்து கேரள மாநிலம் கும்பாவுருட்டி அருவிக்கு செல்ல தயாராகினர். அதன்படி அங்கிருந்து புறப்பட்டு கேரள மாநிலம் அச்சன்கோவில் அருகே உள்ள கும்பாவுருட்டிக்கு சென்றனர்.
அங்கு அனைவரும் அருவியில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் அங்குள்ள தடாகத்தில் சென்றனர். அதில் ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் தெரியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தனர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து அங்குள்ள தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்ததில், இருவரும் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்மலை போலீசாரும் வந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புனலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மற்றவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி அழகாமுத்துநகரை சேர்ந்த பழனி மகன் ராமச்சந்திரன் (வயது 31), முள்ளக்காடு ஊரைச் சேர்ந்த சக்திவேல் மகன் இசக்கிமுத்து (25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் 2 பேரின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
முன்னதாக கேரள வனத்துறையினருடன் கும்பாவுருட்டி அருவியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை என சுற்றுலா பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் சுற்றுலா பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.