செய்திகள்

ஆற்காடு அருகே ஏரியில் மூழ்கி 2 பேர் பலி

ஆற்காடு அருகே ஏரியில் மீன்பிடிக்க இறங்கிய 2 பேர் மூழ்கி இறந்தனர்.

மாலை மலர்

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள மேச்சேரி பிராமணர் தெருவை சேர்ந்தவர் அமரேசன் (வயது 36). தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அமசேரன் நண்பர், மேச்சேரி புளியந்தோப்பு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி (35). இவருக்கு ரேவதி என்கிற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் அமரசேனும், சுந்தரமூர்த்தியும் பைக்கில் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. 2 பேரையும் அவர்களுடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். அவர்கள் கிடைக்காததால் கலவை போலீசில் புகார் அளித்தனர். மாயமான 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றிரவு, மேச்சேரி ஏரிக்கரையோரம் இவர்கள் சென்ற பைக் இருந்ததை கண்டு பிடித்தனர். இதனால் ஏரியில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. கலவை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இரவு நேரம் என்பதால், இன்று காலை தேடும் பணி நடந்தது. ஏரியில் இருந்து, அமரேனும், சுந்தரமூர்த்தியும் பிணமாக மீட்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடல்கள், வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கலவை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

2 பேரும் மீன் பிடிக்க ஏரியில் இறங்கியுள்ளனர். போதையில் சுந்தரமூர்த்தி முதலில் ஏரியில் இறங்கி மீன்பிடித்துள்ளார். அவருக்கு நீச்சல் தெரியாது. இதனால், ஏரி தண்ணீரில் சுந்தரமூர்த்தி தத்தளித்தார். நண்பரை காப்பாற்ற, அமரேசன் ஏரியில் குதித்தார்.

இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார். 2 பேரும் மேலே வரமுடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். என்று போலீசார் கூறியுள்ளனர்.