கைது 
செய்திகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் திருடிய 2 வாலிபர்கள் கைது

கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போரூர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் வெளியூரிலிருந்து வரும் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து திருட்டில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க கோயம்பேடு உதவி கமி‌ஷனர் ஜெயராமன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் தனிப்படை அமைத்து பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதில் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (22), தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதி யைச் சேர்ந்த அசோக்குமார் (33) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் திருட்டு குறித்து வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

நள்ளிரவில் வெளியூர்களில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிலர் தங்கள் இடத்திற்கு செல்வதற்கு பஸ் ஏதும் கிடைக்காமல் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டு காலையில் செல்வது வழக்கம். அவ்வாறு தூங்கிக்கொண்டு இருக்கும் பயணிகள் அருகில் சென்று படுத்து தூங்குவது போல நடித்து அவர்களிடம் இருந்து செல்போன், கைப்பை, மணிபர்ஸ் ஆகியவற்றை திருடுவோம்.

நேற்று இரவு பயணி ஒருவரிடம் செல்போன் திருடியபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.