கைது 
செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே அக்காள்-தங்கையை கடத்திய 2 வாலிபர்கள் கைது

வெள்ளிச்சந்தை அருகே அக்காள்-தங்கையை கடத்திய 2 வாலிபர்களை குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மாலை மலர்

குளச்சல்:

வெள்ளிச்சந்தை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலாளிக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தொழிலாளியின் மனைவி உடல்நலக்குறைவால் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் 17 வயது மகள் உடனிருந்து தாயை கவனித்து வந்தார். மருத்துவமனை செல்வதற்காக நாகர்கோவில் கட்டையன்விளையை சேர்ந்த ஜெயசுதன் (வயது27) என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். அப்போது, ஜெயசுதனுடன் 17 வயது சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலாளி இதுபற்றி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளியின் மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவர் இறந்த சில நாளில் சிறுமியின் தங்கையும் மாயமானார். அவரை வெள்ளமோடியை சேர்ந்த உறவினரான அய்யப்பன் (20) கடத்தியதாக குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குளச்சல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி நேற்று முன்தினம் சிறுமிகளை மீட்டார். மேலும், சிறுமிகளை கடத்தியதாக ஜெயசுதன், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர், அவர்கள் 2 பேரும் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கைதான ஜெயசுதனுக்கு திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் உள்ளனர்.