செய்திகள்

கள்ளத்துப்பாக்கி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது

கன்னியாகுமரியில் கள்ளத்துப்பாக்கி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனில் வந்தார். சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த சந்திரன் (வயது 54) உள்பட 3 பேர் தலைமறைவானார்.

அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சந்திரன் வெளியூர்களில் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது சுசீந்திரத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சந்திரனை கைது செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ள துப்பாக்கி வழக்கில் சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிடிபட்ட சந்திரனிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சென்னையில் நடந்த அடகு கடை கொள்ளை சம்பவத்திலும் சந்திரனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கள்ளத்துப்பாக்கி வழக்கில் மேலும் தலைமறைவாகி உள்ள 2 பேரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. #tamilnews