செய்திகள்

ஆப்கான் கமாண்டோ வீரர் திடீர் துப்பாக்கி சூடு - 2 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில், கூட்டு பாதுகாப்பு பணியின்போது அந்நாட்டு ராணுவத்தின் கமாண்டோ படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

மாலை மலர்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஆப்கன் ராணுவத்தினருடன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி படையினரும் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்நிலையில், நங்கார்கர் மாகாணம் அச்சின் மாவட்டத்தில் இன்று இரு நாட்டின் ராணுவத்தினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆப்கானிஸ்தான் கமாண்டோ படை வீரர் ஒருவர் திடீரென தனது துப்பாக்கியால் அமெரிக்க வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 2 வீரர்கள் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். பதில் தாக்குதலில் ஆப்கான் வீரரும் இறந்துபோனார்.

இந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ‘துப்பாக்கியால் சுட்ட வீரர், எங்கள் இயக்கத்தினைச் சேர்ந்தவர். இந்த தாக்குதலில் 4 அமெரிக்கர்களை கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்’ என தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறியதாக தெரிகிறது.