ஆரணி:
ஆரணி அடுத்த பையூர் கிராமம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் குணசீலன். கூலி தொழிலாளி. இவரது மகள் தர்ஷினி (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகள் சரண்யா (14). 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். தர்ஷினியும், சரண்யாவும் நேற்று இரவு 8.30 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க பாறைகுளம் பகுதிக்கு சென்றனர்.
அப்போது, அங்குள்ள குவாரி குட்டையில் சரண்யா தவறி விழுந்துள்ளார். இதை பார்த்த தர்ஷினி குட்டையில் குதித்து தோழியை காப்பாற்ற முயன்றார். ஆனால் குவாரி குட்டையில் தண்ணீர் அளவு அதிகமாக இருந்ததால் இருவரும் வெளியே வரமுடியாமல் குட்டையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வீட்டை விட்டு வெளியே சென்ற பிள்ளைகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் பாறைகுளம் பகுதியில் தேடினர்.
அங்குள்ள குவாரி குட்டை அருகே 2 மாணவிகளின் காலணிகள் கிடந்ததை பார்த்த அவர்கள் ஊர் மக்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி தேடியதில் சரண்யா உடலை மட்டும் மீட்டனர். தர்ஷினி உடலை மீட்க முடியாததால் ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆரணி, செய்யாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 மணி நேரம் போராடி தர்ஷினி உடலை மீட்டனர்.
ஆரணி தாலுகா போலீசார் 2 மாணவிகளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.