மரத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சி 
செய்திகள்

அக்காள், தங்கையை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கும்பல் - தலைமுடியையும் அறுத்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே திருடியதாக கருதிய ஒரு கும்பல் அக்காள் மற்றும் தங்கையை மரத்தில் கட்டி, தலை முடியை அறுத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள தாகுர் கான் பகுதியை சேர்ந்த அக்காள்-தங்கை இருவரை காய்கறி திருட வந்தவர்கள் என கருதி ஒரு கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.

மேலும் இருவரின் தலை முடியையும் அறுத்து கொடூரமாக தாக்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கும்பலிடம் இருந்து 2 பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீஸ் விசாரணையில் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் காய்கறி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. சம்பவத்தன்று இருவரும் உமெடன்பா பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பி உள்ளனர்.

அப்போது வழியில் திடீரென ஆட்டோவில் பழுது ஏற்பட்டு விட்டது. இதனால் வீட்டுக்கு திரும்ப முடியாத பெண்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர்.

மறுநாள் காய்கறிகளை விற்பதற்காக அவர்கள் ஒரு தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் தான் 2 பெண்களும் காய்கறி திருடியதாக தகவல் பரவியதும், கிராம மக்கள் திரண்டு இருவரையும் பிடித்து அடித்து தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து பெண்களை தாக்கியதாக மொத்தம் 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோல ஹசரிபாக் பகுதியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் இரண்டு பேர், ஒரு திட்டம் தொடர்பன ஆய்வுக்கு கோபர்பாசா கிராமத்துக்கு சென்றுள்ளனர். அவர்களை குழந்தை கடத்துபவர்கள் என கருதிய சிலர் 2 பேரையும் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இருவரையும் மீட்டதோடு, அவர்களை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

ஜார்கண்டில் நடைபெற்ற சம்பவங்கள் போல மேற்குவங்க மாநிலம் அசன்கோல் பகுதியில் திருடன் என்ற சந்தேகத்தில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 6.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. கிராம மக்களால் ஆண் ஒருவர் தாக்கப்படும் தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பல்களால் தாக்கி கொலை செய்யப்படும் சம்பவங்களை தடுப்பதற்காக மேற்குவங்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கும்பல் தாக்கிததில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என சட்டம் இயற்றிய நிலையில் இச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.