குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்த ஒகளூர் வ.உ.சி.நகர், புது காலனியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சக்தி (வயது 13). இவர் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே புதுகாலனியை சேர்ந்த மகாராஜன் மகன் சந்தோஷ் (11), கலைச்செல்வன் மகன் சக்தி (12). இவர்கள் 2 பேரும் ஒகளூர் ஆதிதிராவிட நல பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிப்பதற்காக சென்றனர்.
அப்போது 3 பேரும் குளத்தின் ஆழம் தெரியாமல் குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றனர். இதில் 3 பேரும் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி தத்தளித்தனர். இதையடுத்து அங்கு நின்ற பொதுமக்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சக்தி, சந்தோஷ் இருவரும் குளத்தில் மூழ்கி இறந்தனர். கலைச்செல்வன் மகன் சக்தியை மட்டும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்தி, சந்தோஷ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews