சென்னை:
நாடு முழுவதும் நீட் என்னும் தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.
மேலும் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தவும் அதனால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிடும் அரசாணையும் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்தது.
இதனால் கலந்தாய்வை திட்டமிட்டப்படி தொடங்க முடியாமல் போனது. ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையில் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்தனர்.
விதி விலக்கு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தர மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
மருத்துவ மாணவர் சேர்க்கை காலதாமதம் ஆகி வருவதோடு மட்டுமல்லாமல் எந்த அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மாணவர்களையும் பெற்றோர்களையும் கடந்த 2 மாதமாக அச்சுறுத்தி வருகிறது.
ஆகஸ்டு 1-ந்தேதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க வேண்டும். ஆனால் இதுவரையில் எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது என்ற முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை நீடித்து வருகிறது.
பிளஸ்-2 கட்ஆப் மதிப்பெண் அடிப்படையிலா? நீட் தேர்வு மதிப்பெண் முறையில் மாணவர்களை சேர்ப்பதா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
ஐகோர்ட்டு விசாரணையின் போது தரவரிசை பட்டியல் குறித்து நீதிபதி விளக்கம் கேட்டால் அதற்கு சரியான பதிலை தர வேண்டும் என்பதற்காக இரண்டு வகையான தர வரிசைப் பட்டியலை தயார் செய்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் கூறியதாவது:-
மருத்துவ மாணவர் சேர்க்கை குறித்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. இதுதவிர சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறும் முயற்சியும் நடக்கிறது.
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை.
அதனால் இரண்டு வகையில் எந்த முறையில் சேர்க்கை நடத்த உத்தரவு வந்தாலும் அதற்கேற்றவாறு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வு காலதாமதமாகி வருவதால் மேலும் தாமதம் ஆவதை தடுக்கும் வகையில் 2 வகையான தர வரிசைப் பட்டியலை தயார் செய்து வருகிறோம்.
எந்த அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கூறினாலும் அதற்கேற்றவாறு உடனே தரவரிசை பட்டியலை வெளியிட்டு கலந்தாய்வை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டு 50 ஆயிரம் விண்ணப்பங்கள் மருத்துவ படிப்பிற்கு வந்துள்ளன. 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2445 இடங்களும், 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 என மொத்தம் 3228 மருத்துவ இடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.