பைசல்ரகுமான் 
செய்திகள்

கோவையில் பெண்ணிடம் நகை பறித்த காங்கிரஸ் நிர்வாகி உள்பட 2 பேர் கைது

கோவையில் பெண்ணிடம் நகை பறித்த காங்கிரஸ் நிர்வாகி 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது.

மாலை மலர்

குனியமுத்தூர்:

கோவை குனியமுத்தூர் கே.ஜி.கே சாலையை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி(55).

சம்பவத்தன்று தனலட்சுமி மட்டும் கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் இறங்கி கடைக்கு சென்று தனலட்சுமியிடம் சிகரெட் கேட்டார். தனலட்சுமியும் சிகரெட் எடுத்து வாலிபரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது திடீரென அந்த வாலிபர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்தார்.

பின்னர் வேகமாக ஏற்கனவே அங்கு தயார் நிலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

நகையை பறித்ததால் அதிர்ச்சியான தனலட்சுமி திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு செல்வகுமாரும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக விரட்டி சென்றனர். ஆனால் மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து செல்வகுமார் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் செயினை பறித்துக்கொண்டு பைக்கில் ஏறி தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து போலீசார் அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி அந்த நபர்களை தேடி வந்தனர். காமிராவில் பதிவாகி இருந்த வாகனத்தின் எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

காமிராவில் பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் கரும்புக் கடையை சேர்ந்த 17 வயது சிறுவனுடையது என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் குனியமுத்தூர் பகுதியில் மளிகை கடையில் இருந்த தனலட்சுமியிடம் செயினை பறித்தது கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் பைசல்ரகுமான்(30) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இவர்கள் இதுபோன்று கோவை குனியமுத்தூர், பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பரபரப்பான தகவல் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர்கள் பறித்த நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

செயின் பறிப்பில் காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.