விபத்து 
செய்திகள்

இருவேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் பலி

ஒட்டன்சத்திரம் பகுதியில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள்.

ஒட்டன்சத்திரம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 33). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் திருப்பூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த மூலசத்திரம் என்ற இடத்தில் தமிழரசன் வந்தபோது, எதிரே வந்த மினி லாரி ஒன்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் (51). விவசாயி. இவர் நேற்று வேலை தொடர்பாக அருகில் உள்ள அம்பிளிக்கை கிராமத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சக்கம்பட்டி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டன் சத்திரம்-தாராபுரம் சாலையை அவர் கடக்க முயன்றதாக தெரிகிறது. அந்த வேளையில் அவ்வழியாக வந்த கார் ஒன்று, மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மணிவேல் இறந்தார். இதுகுறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.