கைது 
செய்திகள்

திருச்செங்கோட்டில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் உள்பட 2 பேர் கைது

திருச்செங்கோட்டில் விளையாட்டாக மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மொளசியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50) விவசாயி.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வேப்பநேரியை சேர்ந்த வெங்கடேசன் (31), அவரது மனைவி லட்சுமி (26) ஆகியோர் ராமசாமியின் கரும்பு தோட்டத்தில் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.

சம்பவத்தன்று மாலை தோட்டத்து குடிசையில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து அதில் லோடு செய்து இருப்பது தெரியாமல் விளையாட்டாக வெங்கடேசன் தனது மனைவி லட்சுமியை நோக்கி சுட்டார்.

இதில் துப்பாக்கியில் இருந்த பால்ரஸ் குண்டு லட்சுமியின் கண்ணில் பாய்ந்தது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மொளசி போலீசார் வழக்குபதிவு செய்து வெங்கடேசனையும், அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்ததாக ராமசாமியையும் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.