உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள கொட்டங்காடு வீரலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 41). இவருக்கு சொந்தமான தோட்டம் கொட்டங்காடு குலசை ரோட்டில் உள்ள அய்யனார் கோவில் அருகில் உள்ளது. தோட்டத்தில் ஆட்டுகிடை அமைத்து இரவு நேரத்தில் சிவராஜ் மற்றும் அவரது தம்பி பட்டுராஜிம் காவல் காத்து வந்தனர்.
இந்நிலையில் ஆட்டுக்கிடைக்குள் அதிகாலையில் புகுந்த இரு வாலிபர்கள் ரூ. 20ஆயிரம் மதிப்புள்ள 3 ஆடுகள், 2 ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்ல முயன்றனர். ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த சகோதரர்கள் இருவரும் ஆடுகளை திருடிச் செல்ல முயன்ற இருவரையும் பிடித்து குலசேகரன்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர்கள் குலசேகரன்பட்டினம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பொன்முத்து (28), அதே பகுதியை சேர்ந்த நம்பி மகன் இசக்கிமுத்து (17) என்பதும், ஆடுகளை திருடி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆடுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.